திங்கள், 4 ஏப்ரல், 2011

ஸ்கந்தவரோதயா கல்லூரி


கொட்டும் மழையிலும் ஸ்கந்தாவின் மெய்வல்லுனர் போட்டி: இளையதம்பி வென்றது

-மைதானத்திலிருந்து கிரிசாந், பாலகுமார், பானுசன்- யாழ் ஸ்கந்தவரோதயா கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி இன்று வியாழக்கிழமை (3.2.2011) பிற்பகல் 2 மணிக்கு பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.
கல்லூரியின் முதல்வர் ஆறு திருமுருகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராக பெருந்தோட்டத்துறை ஆலோசகர் சு.பத்மநாதனும், சிறப்பு விருந்தினராக யாழ் தெங்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் செ. ஜெயநாதனும் கலந்துகொண்டனர்.
விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டதைத் தொடர்ந்து, மங்கள விளக்கேற்றல் மற்றும் இறைவணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
தேசியக்கொடி மற்றும் இல்லக்கொடிகள் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து இல்லங்களின் தலைவர்களினால் ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது.
இதன் பின்னர் பிரதம விருந்தினர் சு.பத்மநாதன் விளையாட்டுக்களை ஆரம்பித்து வைத்ததைத் தொடர்ந்து மாணவர்களின் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.
விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாகி சிறிது நேரத்தில் மழை கொட்டத் தொடங்கியது. எனினும், மாணவர்கள் சளைக்காது விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபட்டனர்.
இடைவேளை நிகழ்வாக மாணவர்களின் உடற்பயிற்சியும் பின்னர் , பழைய மாணவர் நிகழ்வுகள் என்பனவும் நடைபெற்றன.
இல்ல மெய்வல்லுனர் போட்டியில் இளையதம்பி இல்லம், மாணிக்கம் இல்லம், நாகநாதன் இல்லம், கந்தையா இல்லம், சுப்பிரமணியம் இல்லம் முறையே முதலாம், இரண்டாம் மூன்றாம், நான்காம், ஐந்தாம் இடங்களைப் பெற்றுக்கொண்டன.
இறுதியாக போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்கள் மற்றும் சம்பியன் கேடயங்களை பிரதம விருந்தினர்கள் , சிறப்பு விருந்தினர்கள் மற்றும் திருமதி.இராஜேஸ்வரி பத்மநாதன் ஆகியோர் வழங்கினர்.
இந்த நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் ஆறு திருமுருகன், ஆசிரியர், மாணவர்கள் பெற்றோர், பழைய மாணவர்கள் நலன் விரும்பிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக